பாம்பனின் புதிய செங்குத்து தூக்குப் பாலத்தில் ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம்

By KU BUREAU

ராமேசுவரம்: பாம்பனில் நடைபெற்று வரும் புதிய ரயில் பாலத்தின் செங்குத்து தூக்குப் பாலத்தில் நேற்றிரவு ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டு நூறு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் ரயில்வே அமைச்சகம் பாம்பன் கடலில் பழைய பாலத்தின் அருகிலேயே புதிய ரயில் பாலத்தைக் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கியது.

புதிய பாம்பன் பாலத்துக்கான திட்டச் செலவு ரூ.535 கோடி. பாலத்தின் நீளம் 2,070 மீட்டர் (6,790 அடி) ஆகும். 101 தூண்களைக் கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 6 மீட்டர் உயரத்தில் புதியப் பாலம் எழுப்பப்படுகிறது. பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் செல்ல பாம்பன் சாலைப்பாலத்துக்கு இணையான 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் இயங்கக் கூடிய செங்குத்து தூக்குப்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த வாரம் நிறைவடைந்தது.

இந்த புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்குப் பாலத்தை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமேசுவரத்திலிருந்து மண்டபத்துக்கு அக்டோபர் முதல் ரயில் போக்குவரத்தைத் தொடங்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இரவு பகலாக பணிகள் நடந்து வருகின்றன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு புதிய ரயில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. விரைவில் செங்குத்து தூக்குப் பாலத்தின் மொத்த எடை தாங்கும் திறனும், பாலத்தினை பெரிய படகுகள், கப்பல்கள் கடக்கும்போது ஹைட்ராலிக் லிஃப்ட் மூலம் தூக்குப் பாலத்தை மேலே தூக்கி நிறுத்துவதற்கான சோதனையும், இன்ஜினுடன் பெட்டிகளை இணைத்தும், சரக்கு ரயிலும் இயக்கிச் சோதனை நடத்தப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE