சென்னையில் குப்பை அகற்றும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சியின் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 289 வாகனங்களை வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிப்பு மட்டுமின்றி, அதிகாரிகள் ஆய்வு பணிகள் உள்ளிட்டவற்றுக்கு சுமார் 2 ஆயிரத்து 886 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் குப்பை அகற்றும் 289 லாரிகள், பேட்டரி வாகனங்கள், பொக்லைன் இயந்திரங்கள், பாப்காட், மாடு, நாய் பிடிக்கும் வாகனங்கள், அதிகாரிகள் வாகனங்களும் அடங்கும். மாநகராட்சி பகுதியில் ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், அண்ணா நகர் போன்ற மண்டலங்களில் மாநகராட்சி நிர்வாகமே குப்பை அகற்றும் பணிகளை நேரடியாக செய்து வருகிறது.

மற்ற மண்டலங்களில் அப்பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி வசம் உள்ள பகுதிகளில் குப்பை அகற்றும் பணிகளில் தொய்வு இருப்பதாகவும், குப்பை லாரிகள் முறையாக இயக்கப்படாததால், குப்பைகள் தேங்குவதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படும் கனரக லாரிகள் 289-லும் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தி அவற்றின் இயக்கத்தை கண்காணிக்க வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "தற்போது வீடு வீடாக குப்பை அகற்றும் வாகனங்களை வாங்கும் போது, ஜிபிஎஸ் கருவியுடன் வாங்கி வருகிறோம். அவ்வாறு 350 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஆணையர் அறிவுறுத்தல் படி கனரக குப்பை அகற்றும் லாரிகளிலும் பொருத்தி கண்காணிக்க இருக்கிறோம். இதன் மூலம் மாநகர தூய்மை பணி மேம்படும்" என்று அதிகாரிகள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE