அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தாமதம் ஏன்? - அமைச்சர் சு.முத்துசாமி விளக்கம்

By KU BUREAU

ஈரோடு: அதிமுக ஆட்சியில் நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்ளாததே அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தாமதமாக காரணம், என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் மொத்தமுள்ள 6 நீரேற்று நிலையங்களில், 1 முதல் 3 நீரேற்று நிலையங்கள் உள்ள பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படாததால், குழாய் பதிக்கும் பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நில உரிமையாளர்களிடம் அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு குழாய் பதிக்கப்பட்டு, 2023-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி சோதனை ஓட்டம் நடந்தது.

இதில், பல்வேறு இணைப்பு குழாய்களில் பழுது ஏற்பட்டு நீர்க்கசிவு ஏற்பட்டது. இந்த பழுதுகள் சரி செய்யப்பட்டு 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 750 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டது. கடந்த ஆட்சியில் நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்ளாததே திட்டம் தாமதமாக காரணம். தற்போது 100 விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்துக்கான தொகை வழங்க வேண்டியது உள்ளது.

அதன் பின்னர், போதிய உபரி நீர், காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தால் இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இயலவில்லை. பவானி ஆற்றில் கூடுதலாக வரக்கூடிய ஒன்றரை டி.எம்.சி தண்ணீரை இந்த திட்டத்துக்கு பயன்படுத்த வேண்டும். கூடுதலாக தண்ணீர் வரும் போது, திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும். அப்போது திட்டம் தொடங்கி வைக்கப்படும்.

மேலும், அத்திக்கடவு -அவிநாசி திட்டக் குழாய்களை, ஆய்வு மற்றும் பழுது பார்ப்பதற்கு ஏதுவாக, நில உரிமையாளர்களுக்கு, பாதை உரிமை தொகை பெறுவதற்கு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை கருத்து நியாயமானது: முன்னதாக, ‘அத்திக்கடவு அவிநாசி திட்ட விவகாரத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் செய்கிறாரா’ என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, ‘இந்த விவாகரத்தில் அவர் அரசியல் செய்கிறார் என்று நான் பார்க்கவில்லை. அவர் கூறிய கருத்துகள் நியாயமானது தான். புரிதல் இல்லாமல் அவர் பேசியிருக்கலாம். திட்டம் தாமதத்துக்கான காரணத்தை கூறிவிட்டோம். இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன் அமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிகழ்வில், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE