தஞ்சாவூர்: பள்ளி மாணவ, மாணவிகளை, பள்ளி நேரத்தில் மனுகொடுக்க அழைத்து வருவது சரியான முறை அல்ல. இதுபோல் செய்தால் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் எச்சரித்துள்ளார்
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் இன்று நடந்தது. இதற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி கோரி வடுகன் புதுப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மனு கொடுக்க வந்தனர். இதைப் பார்த்த ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கோபமடைந்தார்.
படிக்கும் மாணவ-மாணவிகளின், படிப்பை கெடுக்கும் விதத்தில் அவர்களை மனு கொடுக்க அழைத்து வருவது சரியானது அல்ல. முதலில் அவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லுங்கள். பின்னர் வந்து மனு கொடுங்கள் என்று மனு கொடுக்க வந்தவர்களை பார்த்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கடுமையாக எச்சரித்தார்.
இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் தஞ்சாவூர் மாநகராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் ஐயப்பன் தலைமையில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளை சீருடையுடன் அழைத்து வந்து மனு அளித்தனர்.
» துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி? - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதில்
» திமுக முன்னாள் மண்டல தலைவரைக் கொல்ல முயற்சி.. அரிவாளுடன் சுற்றித்திரிந்தவர் கைது!
இதைப் பார்த்து மீண்டும் கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் பிரியங்கா, “மனு கொடுக்க வரும் நீங்கள் எதற்காக படிக்கும் மாணவ, மாணவிகளை அழைத்து வருகிறீர்கள். அவர்களின் படிப்பை வீணாக்குகிறீர்கள். இது தவறான விஷயம். சட்டப்படி குற்றம். உங்கள் கோரிக்கை மனு மீது நான் நடவடிக்கை எடுக்கிறேன். ஆனால் இவ்வாறு பள்ளி மாணவ, மாணவிகளை, பள்ளி நேரத்தில் அழைத்து வருவது சரியான முறை அல்ல. இதற்காக உங்களுக்கு (கவுன்சிலர் ) இன்று நோட்டீஸ் அனுப்பப்படும். இதே போல் மீண்டும் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்தார்.
பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி மீது அக்கறை கொண்டு, அதிரடியாக செயல்பட்ட தஞ்சை மாவட்ட ஆட்சியரின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.