பிடிஆரின் அறிவார்ந்த ஆளுமையை அண்ணன் ஸ்டாலின் இழக்க விரும்பவில்லை!

By என்.சுவாமிநாதன்

அமைச்சர் நாசர் பதவி நீக்கம், அமைச்சர்களின் இலாகா மாற்றம், 12 மணிநேர வேலை மசோதா சர்ச்சை என தொடர் பரபரப்புகளுக்கு மத்தியில் இரண்டாண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறது திமுக அரசு. திமுக அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் சிலரைச் சங்கடப்பட வைத்திருக்கிறது. அதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது திமுகவின் அரசு. இந்தத் தருணத்தில், திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

மு.க.ஸ்டாலின்

திமுகவின் ஈராண்டு ஆட்சியை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்?

எனக்குத் தெரிந்து தமிழக அரசியல் வரலாற்றில் ஈராண்டு காலத்தில் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்தியது ஸ்டாலினின் ஆட்சிதான். அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெறுவது, வாக்களித்த மக்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்கள் கூட நாம் இவர்களுக்கு வாக்களிக்காதது தவறு என உணரும்படியாக ஒரு ஆட்சியை முதல்வர் நடத்திக் கொண்டு இருக்கிறார்.

முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் முதல் இடத்தில் இருந்த குஜராத்தை இன்று புறந்தள்ளிவிட்டு முதலீடுகளை ஈர்க்கும் முதல்மாநிலம் தமிழ்நாடு என்னும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். 222 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், 2 லட்சத்து 72 ஆயிரத்து 322 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. அதன்மூலம் 4 லட்சத்து 9,651 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். 1,241 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் லட்சத்திற்கும் அதிகமானோர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அரசின் ஆயுதக் காவல் படைக்கு இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும்தான் தேர்வு எழுத அனுமதி என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழிலும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என முதல்வர் கடிதம் எழுதிய, 24 மணிநேரத்தில் உள்துறை அமைச்சகம் தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் ஆயுதக் காவல்படை தேர்வு எழுத அனுமதித்தது. ஸ்டாலின் தமிழகத்திற்கு மட்டும் முதல்வர் அல்ல. 13 மாநில மக்களின் மனதில் இன்று தங்கசிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார்.

தடாலடியாக அமைச்சர் நீக்கம், இலாகா மாற்றமெல்லாம் செய்து மு.க.ஸ்டாலின் தன்னை இன்னொரு ஜெயலலிதாவாக காட்டிக்கொள்கிறாரோ?

அமைச்சரவை மாற்றத்தில் நாசர் விடுவிக்கப்பட்டு உள்ளார். இத்தனைக்கும் நாசர், வாலிபப் பருவமாக இருந்தபோதே அண்ணன் ஸ்டாலினுக்கு வானமும், சிறகுமாக இருந்தவர். ஏற்கெனவே நாசர் மகன் மீது சில குற்றச்சாட்டுகள் வந்தன. அவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது நண்பர் நாசர் மீது சில குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறேன். எனக்கு அதுபற்றித் தெரியவில்லை.

குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டவர் தன் நண்பராக இருந்தாலும் அவரை விடுவிக்கும் துணிச்சலான முடிவை தளபதி எடுத்துள்ளார். முதலீட்டை வாரிக் குவித்து தமிழகத்தை குஜராத்தை முந்தவைத்த தங்கம் தென்னரசு வகித்த தொழில் துறையை டி.ஆர்.பி ராஜாவிடம் கொடுத்து உள்ளார்.

காவேரிக் கரையோர மக்களுக்கு திமுக ஆட்சியில் பிரதிநிதித்துவம் இல்லாத குறையை இதன் மூலம் போக்கியுள்ளார். அவர் திமுகவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராகவும் இருப்பவர். விரைந்து பணி செய்யும் ஆற்றலும் கொண்ட முன்மாதிரி இளைஞர். அவர் தொழில்துறையில் இமாலாய வெற்றிகளை ஈட்டுவார்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஏற்கெனவே கடல் கடந்த நாடுகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். தகவல் தொழில்நுட்பத்தின் நுட்பங்கள் தெரிந்தவர், உலகளாவிய ஞானம் பெற்றவர் என்னும் அடிப்படையில் அவருக்கு தகவல் தொழில்நுட்பத்துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிதித்துறையை, எதைத் தொட்டாலும் துலங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவர் என்னும் அடிப்படையில் தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆவின் சீரமைப்பிற்காக மனோ தங்கராஜுக்கு பால்வளம் வழங்கப்பட்டுள்ளது.

இது ஜெயலலிதா பாணியைப் போல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்னும் முடிவு அல்ல. நிர்வாகம் சிறக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஜெயலலிதா ஆட்சியில் அன்வர் ராஜாவை அமைச்சரவையில் நான்கு முறை நீக்கி, சேர்த்தனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த வைகை செல்வன் கோட்டைக்குப் போகும்போதே அவரது பதவி பறிக்கப்பட்ட தகவல் வந்தது. இப்படி, சொந்தக் கட்சியினருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது ஜெயலலிதா பாணி. ஆனால், இப்படி ஒரு மாற்றம் நிகழப் போகின்றது என தமிழக மக்களுக்கு ஏற்கெனவே கசியவிட்டு, நிர்வாக ரீதியாக இந்த மாற்றங்களைச் செய்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதை ஜெயலலிதா பாணி என சொல்லக்கூடாது.

பழனிவேல் தியாகராஜன்

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றம் பாஜகவின் சாதனை என அக்கட்சியினர் கொண்டாடுகிறார்களே..?

தரமில்லாத அரசியலை செய்ய துளியும் கூச்சப்படாத கட்சி பாஜக. இதைத்தான் அவர்கள் தேசம் முழுவதும் செய்தார்கள். ஏதாவது ஒரு கட்சிக்குள் ஊடுருவி, அல்லது அந்தக் கட்சியை ஏதாவது ஒரு வகையில் சிதிலமாக்கும் முயற்சியை செய்துகொண்டே இருப்பார்கள். அதனால் வதந்தி பரப்புகின்றார்கள்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் அறிவார்ந்த ஆளுமையை அண்ணன் ஸ்டாலின் இழக்க விரும்பவில்லை. ஆகவே அவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால்தான் அவருக்கு நிபுணத்துவம் இருக்கக்கூடிய தகவல் தொழில்நுட்பத்துறை கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி எதேச்சையாக நடப்பவற்றை சிண்டுமுடியும் தொணியில் வெளிப்படுத்துவதே பாஜக குணம். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அவர்களின் ஈனத்தனமான அரசியலுக்கு ஆயுள் மிகக்குறைவு என்பதை வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக மக்கள் உணர்த்துவார்கள்.

திரும்பப் பெறப்பட்டுவிட்டாலும், 12 மணிநேர வேலைச் சட்டம், தானியங்கி மது வினியோகம் எல்லாம் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறதே?

12 மணி நேர வேலை மூலம் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முயற்சிக்கப்பட்டது. அவர்கள் இங்கே முதலீடு செய்ய வருவதற்கு சில அழுத்தங்களை தமிழக அரசுக்குக் கொடுத்தார்கள். அப்போது மட்டுமே நம்மோடு உடன்பாடு செய்யமுடியும் என சில நிர்பந்தங்கள் வந்தன. இதைத் தமிழகத்தில் பரிசோதித்துப் பார்க்கலாம் என முதல்வர் முடிவெடுத்தாரே தவிர, அதைத் திணிக்கவில்லை. ஆனாலும், கூட்டணிக் கட்சிகளே அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மே தினத்தில் அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது. தவறுகளில் இருந்து தன்னைத் திருத்திக் கொள்ளும் ஜனநாயகப் பண்பும், பக்குவமும் முதல்வருக்கு இருக்கிறது என்பதே இச்சட்டம் திரும்பப் பெறவும் காரணம். இதைப் பாராட்டவே வேண்டும்.

அதேபோல் தானியங்கி மது விற்பனை மெஷின் விஷயத்தில் நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு எதுவும் வரவில்லை. மது கலாச்சாரம் தவறோ, சரியோ அது பரவிவிட்டது. அரசு தானியங்கி மது விற்பனை மெஷினை அனுமதித்தாலும் அதில் 21 வயதுக்கு குறைவானவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என மதுவிலக்கு அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தலுக்கு திமுக தயாராகிவிட்டதா?

தமிழகத்தில் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளுமே வெல்லும். அதிமுக கண் முன்பே கரைந்துகொண்டு இருக்கிறது. பொதுச் செயலாளராக முடிசூடிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, முன்னேற முடியாமல் முட்டுச்சந்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, தன் சொத்து விவரங்களை மறைத்துவிட்டதாக அவர் மீது வழக்குப் பாய்ந்திருக்கிறது.

கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் சட்டம் - ஒழுங்கை கையில் வைத்திருந்த அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதிலிருந்தே அவருக்கு அதில் பங்கு இருக்கலாம் என சிபிசிஐடி கருதுகின்றது. அதில் நடவடிக்கை பாயுமானால் எடப்பாடி பழனிசாமியால் தாக்குப்பிடிக்க முடியாது. அதிமுகவில் மாஸ் தலைவர்கள் இன்று இல்லை. என்னைக் கேட்டால் திமுகவை எதிர்க்க தமிழ்நாட்டில் எதிரிகளே இல்லை.

டிடிவி தினகரனுடன் கைகோத்திருக்கிறாரே ஓபிஎஸ்?

ஓபிஎஸ் இமாலயத் தவறு செய்து இருக்கிறார். மூன்று முறை முதல்வராக இருந்தவர், தர்மயுத்தம் நடத்தியவர். அப்படிப்பட்டவர் டிடிவி தினகரன் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்து அதிமுகவை காப்பாற்ற இந்த நடவடிக்கை என்று சொன்னதே அவர் அரசியலில் கரைசேர மாட்டார் என்பதை தெளிவுபடுத்திவிட்டது. எடப்பாடி பழனிசாமியின் வீழ்ச்சி உறுதியாகிவரும் சூழலில், ஓபிஎஸ்ஸின் திருச்சி மாநாடு கவனிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் பொதுமக்களை சந்திக்கும் பயணத் திட்டம் தான் அவருக்கு இருந்திருக்க வேண்டும். டிடிவி தினகரன் என்னும் குட்டிச் சுவரை சந்தித்ததன் மூலம் பெருந்தவறை செய்துவிட்டார் ஓபிஎஸ்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE