கல்பாக்கம்: அங்கம்மாம்பட்டில் சாலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறி கிராம பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெரும்பூர் அடுத்த அங்கம்மாம்பட்டு கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து பென்சிங் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விட்டிலாபுரம்-நெரும்பூர் செல்லும் சாலையில் இன்று சிறிது நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் அங்கம்மாம்பட்டு கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், ரேஷன் கடை, பள்ளி மற்றும் நெரும்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக பைராகிமடம் மற்றும் அங்கம்மாம்பட்டு இடையே அமைந்துள்ள சாலையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தின்18வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் என்பவர், மேற்கண்ட சாலையில் ரேஷன் கடை அருகே தனக்கு சொந்தமான இடம் எனக்கூறி சாலையின் நடுவே பென்சிங் அமைத்ததாக கூறப்படுகிறது.
» துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி? - முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பதில்
» வீட்டு வரைபட அனுமதிக்கு பகல் கொள்ளை கட்டண உயர்வு: திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
இதனால், அங்கம்மாம்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் ரேஷன் கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக 2 கி.மீ., தொலைவு சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனால், சாலையை ஆக்கிரமித்து பென்சிங் அமைத்துள்ளதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விட்டிலாபுரம்-நெரும்பூர் செல்லும் சாலையில் அமர்ந்து இன்று சிறிது நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, போலீஸார் கூறுகையில், ''அங்கம்மாம்பாட்டு-பைராகிமடம் இடையே அமைந்துள்ள மேற்கண்ட சாலையை ஆக்கிரமித்து பென்சிங் செய்யப்பட்டுள்ளதாக கூறி மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆனால், முறையாக பட்டா பெற்றுள்ளதால் பென்சிங் செய்யப்பட்டுள்ளதாக நிலத்தின் உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விசாரித்து உரிய தீர்வு காணப்படும்'' என்றனர்.