சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து, பல்வேறு திட்டப்பணிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என்று ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும். பருவமழைக்கு அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம். எப்பேர்பட்ட மழை வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது ' என்று அவர் கூறினார்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க கோரிக்கை வலுத்து வருகிறதே என்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, 'வலுத்துவருகிறதே தவிர பழுக்கவில்லை' என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
» வீட்டு வரைபட அனுமதிக்கு பகல் கொள்ளை கட்டண உயர்வு: திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
» ரசிகர்கள் அதிருப்தி: 'GOAT' படத்தில் வெங்கட்பிரபு செய்யும் மாற்றம்?!
உதயநிதி ஸ்டாலினுக்கு மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது முதல்வர் ஸ்டாலின் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.