தூத்துக்குடி | உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

தூத்துக்குடி: தூத்துக்குடி தாளமுத்துநகர் நேரு காலனி ஆனந்த நகரைச் சேர்ந்தவர் கணேசன் (60). இவரது வீட்டில் சுமார் 3 அடி அகலம், 18 அடி ஆழம் கொண்ட உறைகிணறு உள்ளது. இந்தக் கிணற்றின் அருகேகழிவுநீர்த் தொட்டி (செப்டிக் டேங்க்) உள்ளது. கழிவு நீர் கிணற்றுக்குள் கசிந்ததால், தண்ணீர் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் உறை கிணற்றைப் பயன்படுத்தாமல் மூடி வைத்திருந்தனர்.

இந்நிலையில், கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு, அதை சுத்தம் செய்யும் பணியில் வீட்டு உரிமையாளர் கணேசன், ஆறுமுகநேரியைச் சேர்ந்த மாரிமுத்து (36) ஆகியோர் நேற்று ஈடுபட்டனர். முதலில் மோட்டார் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றினர். அப்போது, வாளி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

வாளியை எடுப்பதற்காக கணேசன் கயிறுகட்டி கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் மாரிமுத்துவும் கிணற்றுக்குள் இறங்கினார்.

அவரும் வெளியில் வரவில்லை. இதை பார்த்த உறவினர்கள் அலறவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்க முயன்றனர். அங்கு நின்று கொண்டிருந்த பவித்ரன் (32), ஜேசுராஜன் ஆகியோர் கிணற்றில் இறங்கிப் பார்த்தபோது, அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அவர்கள் சப்தமிடவே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டனர். சிறிது நேரத்தில் இருவரும் மயங்கினர். உடனடியாக அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப் புப் படையினர் ஆய்வு செய்தபோது, விஷ வாயு தாக்கியதில் கணேசன், மாரிமுத்து ஆகியோர் கிணற்றுக்குள் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து, தீயணைப்பு படையினர் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கிணற்றுக்குகள் இறங்கி, இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE