சென்னை: கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்து வருகிறது. முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய் ஆகியவை கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே காய்கறிகளின் விலை உயரத்தொடங்கியது. தக்காளி விலை கிலோ ரூ.70 வரை உயர்ந்தது. பீன்ஸ் ரூ.110-க்கும், முருக்கைக்காய் ரூ.60-க்கு அதிகமாக விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது காய்கறிகளின் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக தக்காளி கிலோ ரூ.23 ஆக குறைந்துள்ளது. சில்லறை விற்பனை சந்தைகளில் கிலோ ரூ.25 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டு வருகிறது.
முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெண்டைக்காய் தலா ரூ.10-க்கு விற்கப்பட்டு வருகிறது. இவை முந்தைய மாதங்களில் கிலோ ரூ.20-க்கு மேல் விற்கப்பட்டு வந்தது. அதேபோல் பீன்ஸ் ரூ.30, முருகங்கைக்காய் ரூ.15 எனக் குறைந்துள்ளது.
மற்ற காய்கறிகளான கேரட் ரூ.80, பச்சைமிளகாய் ரூ.40, கத்தரிக்காய், சாம்பார் வெங்காயம் தலா ரூ.30, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் தலா ரூ.28, அவரைக்காய், பாகற்காய் தலா ரூ.25, பீட்ரூட் ரூ.20, புடலங்காய், நூக்கல் தலா ரூ.15-க்கு விற்கப்பட்டு வருகிறது.
» கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: சிதம்பரம் அருகே தீவு கிராமங்களில் தண்ணீர் புகுந்தது!
» நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை அமைச்சர்கள் கே என் நேரு, தங்கம் தென்னரசு ஆய்வு
காய்கறிகளின் விலை குறைந்து வருவது தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, "கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் மற்றும் ஆந்திர, கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
இதனால் காய்கறி உற்பத்தி அதிகரித்து, கோயம்பேடு சந்தைக்கு வரத்தும் அதிகரித்துள்ளது. அதனால் காய்கறி விலை குறைந்துள்ளது. சில காய்கறிகளின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.