கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்: சிதம்பரம் அருகே தீவு கிராமங்களில் தண்ணீர் புகுந்தது!

By KU BUREAU

கடலூர்: கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதால் சிதம்பரம் அருகே தீவு கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இப்பகுதியை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் படகில் சென்று ஆய்வு செய்தனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூருக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்தத் தண்ணீர் கல்லணைக்கு வந்து கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கீழணையை வந்து அடைந்துள்ளது. 9 அடி தண்ணீரை மட்டுமே கீழணையில் தேக்க முடியும் என்பதால் கீழணையில் இருந்து நேற்று முன்தினம் காலை விநாடிக்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 82 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேலும் விநாடிக்கு 2 ஆயிரத்து 704 கன அடி தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், தெற்கு ராஜன் வாய்க்கால், குமிக்கி மண்ணியாறு ஆகியவற்றில் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி கல்லணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கீழணையில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 64 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மீதி தண்ணீர் பாசனத்துக்காக வாய்க்கால்களில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி, திட்டுக்காட்டூர் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இதையறிந்த மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் பழைய கொள்ளிடம் ஆற்றில் படகில் சென்று வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம்களையும் பார்வையிட்டார். இவருடன் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளும் சென்றனர். கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு வரும் தண்ணீரி்ன் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்படி அதிகரிக்கும் பட்சத்தில் கொள்ளிடம் ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கீழணை மற்றும் கொள்ளிடம் ஆற்றின் இடது கரை பகுதியில் சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தலைமையில் அணைக்கரை உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் மற்றும் உதவி பொறியாளர் ரமேஷ், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE