நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை அமைச்சர்கள் கே என் நேரு, தங்கம் தென்னரசு ஆய்வு

By KU BUREAU

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நநிறைவடைந்த, நடைபெற்று வரும் பணிகளை தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகாத்மா காந்தி காய்கறி சந்தை, ரூ.53.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் வணிக வளாகத்தின் இரண்டு பகுதிகள், வாகனம் நிறுத்துமிடம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட திறக்கப்பட்ட நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் ஆகியவைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆய்வு செய்தனர்.

பாளையங்கோட்டை பகுதியில் கட்டப்பட்டு வரும் மகாத்மா காந்தி காய்கறி சந்தையை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர்கள் விரைந்து பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினர். தொடர்ந்து நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் வாகனங்கள் வந்து செல்லும் பாதை, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இடம் ஆகியவை பார்வையிட்டனர். காலியாக உள்ள கடைகளை வாடகைக்கு விடுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கடைகளுக்கு ஏல தொகையாக சதுரடிக்கு ரூ.120 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அமைச்சர்களிடம் தெரிவித்தனர். இதனை மாற்றி குறைவான கட்டணத்தை நிர்ணயம் செய்து விரைவில் கடைகளை வாடகைக்கு விடுவதற்கு ஏற்பாடு செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர். மேலும் வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் அரசு அலுவலகங்களை பேருந்து நிலைய கட்டிடங்களில் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அதிகாரிகளை அறிவுறுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் , பொறுப்பு மேயர் ராஜூ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE