13 ஆண்டுக்கு முன்பு காணாமல்போன சிறுமியை ஏஐ உதவியுடன் தேடும் சென்னை போலீஸ் - தந்தையின் பாச போராட்டம்

By KU BUREAU

சென்னை: சென்னையில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான 2 வயது மகளை, கண்டுபிடிக்க அவரது தந்தை தொடர்ந்து போராடி வருகிறார். இந்த பாசப் போராட்டம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வங்கி அதிகாரி கணேசன் (50). இவருடைய 2 வயது மகள் கவிதா, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ம் தேதி வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். அதிர்ச்சி அடைந்த கணேசன் பல இடங்களில் தேடியும் மகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

விருகம்பாக்கம் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த திரிபாதி இந்த வழக்கை துரிதப்படுத்தினார். தனிப்படைகளை அமைத்து தேடினார். ஆனாலும், குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.

பின்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டு அவர்களும் துப்பு துலக்கினார்கள். ஆனாலும், ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் போலீஸார் வழக்கை முடித்து வைத்தனர்.

ஆனாலும், மனம் தளராத தந்தை கணேசன் தனது மகளை தேடும் பயணத்தை தொடர்ந்தார். தொடர்ந்து காவல் துறையின் கதவுகளை தட்டினார். இவ்வாறாக 13 ஆண்டுகள் கடந்தது.

இந்நிலையில்தான் சிறுமி மாயமான வழக்கு விவகாரத்தை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் கையிலெடுத்துள்ளனர்.

தற்போது தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்டுள்ளதால் அதனை பயன்படுத்தி குழந்தையை தேடும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 2 வயதில் மாயமான கவிதா புகைப்படத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி அவர் தற்போது 14 வயதில் எப்படி இருப்பார் என்ற தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவிதாவின் பழைய புகைப்படம், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் போஸ்டராக வெளியிட்டுள்ளனர்.

அதில் மாயமான குழந்தை கவிதா பற்றி தகவல் தெரிந்தால் 9444415815, 9498179171 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், சரியான தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீஸார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மகளுக்காக 13 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் கணேசன். இந்த பாசப்போராட்டம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE