மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக உள்ளது: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

By KU BUREAU

மேட்டூர்/தருமபுரி: மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராக உள்ளது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

மேட்டூர் அணையில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர், நீர்வரத்து, வெளியேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, எம்.பி.க்கள் செல்வகணபதி, மணி, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, எஸ்.பி.அருண் கபிலன், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், சதாசிவம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:

கர்நாடக அரசு எவ்வளவு முயன்றாலும், மேகேதாட்டு அணையைக் கட்ட விடமாட்டோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் மேகேதாட்டு என்ற வார்த்தையே இல்லாத நிலையில், இதுகுறித்து காவிரி நடுவர் மன்றம் பேசுவது, மத்திய அரசின் தூண்டுதலாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேகேதாட்டு விவகாரத்தில் மத்தியஅரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராகவே உள்ளது.

மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என்று வழக்கு தொடர்ந்துவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்க முடியாது.

தருமபுரி மாவட்டத்தில் காவிரிநீரை பயன்படுத்தி பாசனம் மேற்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அத்திக்கடவு- அவிநாசி திட்டம் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

நீர்வரத்து குறைந்தது... கர்நாடக மாநில அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. கடந்த 1-ம் தேதி விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் காலை முதல் படிப்படியாகக் குறைந்து நேற்று மாலை 70 ஆயிரம் கனஅடியானது. அதேநேரத்தில், அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து படிப்படியாகக் குறைந்து, நேற்று மாலை 6 மணிக்கு விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE