அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வருவதற்கு நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வே காரணம்: பழனிசாமி கருத்து

By KU BUREAU

சென்னை: அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வருவதற்கு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வே காரணம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியவர் எம்ஜிஆர். 1991-96 அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிடம் போராடி, 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றவர் ஜெயலலிதா.

தமிழக அரசு 2009-ம் ஆண்டு பட்டியல் இனத்தவர்களுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியது. இதைப் பறிக்கும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்ப்பட்டன.

இதற்கிடையில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த உள் இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு வழக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது.

எனது தலைமையிலான அதிமுக அரசு 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய ஆதிதிராவிடர் நலச் செயலர் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அதன் பரிந்துரைகளின்படி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு, திறம்பட கருத்துகளை எடுத்துரைத்தனர். அதனடிப்படையில், 2020 ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டுக்கு சாதகமான இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.

பின்னர் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதிமுக அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தற்போதைய தமிழக அரசும் வாதங்களை எடுத்து வைத்ததன் அடிப்படையில் பட்டியல் இனத்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் உள்இடஒதுக்கீடு வழங்கியது செல்லும்’ என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வருவதற்கு, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கிய தீர்ப்புதான் முக்கிய காரணம். இந்த வழக்கில் அதிமுக எடுத்த முயற்சிகள், சட்ட முன்னெடுப்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE