தீரன் சின்னமலையின் 219-வது நினைவு தினம்: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் மரியாதை

By KU BUREAU

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர்தீரன் சின்னமலையின் 219-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டி, திருவிக தொழிற்பேட்டை அருகில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு கீழே அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

இப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், கணபதி, பிரபாகர் ராஜா, துணைமேயர் மு.மகேஷ்குமார், செய்தித்துறை செயலர் வே.ராஜாராமன், செய்தித்துறை இயக்குநர் வைத்திநாதன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், டி.ஜெயக்குமார், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

தமாக சார்பில் அதன் தலைவர்ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார். அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளுடன் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா உள்ளிட்டோர், சேலம் சங்ககிரி கோட்டை அடிவாரம் மற்றும் சங்ககிரி - ஈரோடு சாலை சந்திப்பில் உள்ள நினைவுத்தூண் பகுதியில் தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல், ஈரோடு அரச்சலூர், ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பணன்,கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் புகழாரம்: தீரன் சின்னமலை நினைவுதினத்தையொட்டி, முதல்வர்ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில், ‘‘ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணியமாட்டேன், வரி கொடுக்க மாட்டேன் என ஓடாநிலையில் கோட்டை கட்டிப் போராடிய தீரன் சின்னமலைக்கு புகழ் வணக்கம். சென்னிமலைக்கும், சிவன் மலைக்கும் இடையே ஒரு சின்னமலை என்று நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு கருணாநிதி அமைத்த சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தினேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE