35 ஆண்டு இடஒதுக்கீடு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் 10.50 சதவீதத்துக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதாக தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை மட்டும் அரைகுறையாகவும், திரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியர்களுக்கு இழைத்த துரோகங்களை மறைக்க திமுக அரசு முயன்றிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் 1989-ம் ஆண்டுக்கு பிந்தைய 35 ஆண்டுகளில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு சமூகத்துக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த முழுமையான விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும். அதில் வன்னியர் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தால் அதில் பாமகவுக்கு பெரும் மகிழ்ச்சிதான். ஆனால், அந்த விவரங்களை வெளியிட திமுக அரசு மறுத்து வருகிறது.

அரசு வேலைவாய்ப்புகளில் ஒவ்வொரு சமூகத்துக்கும் கிடைத்தபுள்ளி விவரங்களை வெளியிட வேண்டும் என 2020-ம் ஆண்டில் தமிழக அரசுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அந்த விவரங்களை வெளியிட்டால் தமிழகத்தில் சமூகக் கொந்தளிப்பு ஏற்படும் என்று தமிழக அரசும், தேர்வாணையமும் கூறின. ஆனால், இப்போது திடீரென வன்னியர்கள் குறித்த புள்ளி விவரங்களை மட்டும் திரித்து வெளியிட்டிருப்பது ஏன்?

வன்னியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டது என்ற மாயையை ஏற்படுத்துவதுதானே அரசின் நோக்கம். எந்த ஒரு சிக்கலையும் திசை திருப்ப வேண்டும் என்றால், அதற்காக எதையும் செய்யத் துணிந்ததுதான் திமுக அரசு. அத்தகையதொரு திருவிளையாடலைத்தான் இப்போது அரங்கேற்ற முயல்கிறது.

திமுகவின் அனைத்து மோசடி வேலைகளையும் அறிந்தவர்கள்தான் தமிழக மக்கள். அவர்கள் இத்தகைய சித்து விளையாட்டுகளை நம்பி ஏமாற மாட்டார்கள். இதிலும் திமுகவுக்கு தோல்வியே கிடைக்கும்.

தமிழகத்தில் சமூகநீதியை காப்பதில் திமுக அரசுக்கு அக்கறை இருந்தால், 1989-ம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்வணையமும் நடத்திய போட்டித் தேர்வுகள் என்னென்ன, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் அரசு நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அதில் ஒவ்வொரு வகுப்புக்கான இட ஒதுக்கீட்டிலும் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு, பொதுப்பிரிவுக்கான 31 சதவீத இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE