வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

By KU BUREAU

சென்னை: தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,761-லிருந்து 3,063 ஆக உயர்ந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு: தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழகம் மற்றும் ஆந்திராவின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு கடந்த மே 23 முதல் 25 வரை நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு தமிழகத்தில் உள்ள 26 வனப் பிரிவுகளில் நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பில் 1,836 வனத்துறை ஊழியர்கள் மற்றும் 342 தன்னார்வலர்கள் என மொத்தம் 2,178 பேர் ஈடுபட்டனர்.

இந்த கணக்கெடுப்பில், சேகரிக்கப்பட்ட தகவல்கள் முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, 26வனப் பிரிவுகளில் யானைகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த கணக்கெடுப்பானது யானைகளின் எண்ணிக்கை, பாலின விகிதம், யானைகளின் இயக்கவியல் மற்றும் யானைகளின் வாழ்விடத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்கு யானைகளின் பயன்பாட்டின் பரப்பளவு பற்றிய தெளிவான விவரங்களை வழங்கும்.

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும் அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்துகொள்ள உதவும் வகையில், 2024-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா திறப்பு விழாவின்போது வெளியிட்டு, அதற்கான குறும்படத்தையும் பார்வையிட்டார்.

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி யானைகளின் எண்ணிக்கை 2,761 ஆக இருந்தது.இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்றதிலிருந்து யானைகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961 ஆக உயர்ந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டுக்கான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள், குறிப்பாக யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அகத்தியமலை யானைகள் காப்பகம், தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு இயக்கம், யானைகள் வாழிடங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற தமிழக அரசின் நடவடிக்கைகளும் இதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

நீலகிரியில் அதிகம்: தமிழகத்தை பொறுத்தவரை சமீபத்திய கணக்கெடுப்பில் 3,063 யானைகள் இருப்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக கடந்த 2002-ல் யானைகள் எண்ணிக்கை 3,737 ஆக இருந்த நிலையில், 2007-ல் 3,867 ஆகவும், 2012-ல் 4,015 ஆகவும் இருந்துள்ளது. இது 2017-ல் 2,761 ஆக குறைந்துள்ளது. அதன்பின் கடந்தாண்டு கணக்கெடுப்பில் 2,961 ஆக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு கணக்கெடுப்பில், நீலகிரியில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகபட்சமாக 2,253 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. 40 சதவீதம் பெரிய யானைகளில் 23 சதவீதம் பெண் யானைகளும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE