ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் 2025ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியீடு

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, 2025ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது. முக்கிய மூலப் பொருளான ஆர்ட் பேப்பர் விலை மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக இந்த ஆண்டு காலண்டர் விலை 10 சதவீதம் வரை உயர்கிறது.

சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சுத் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. சிவகாசியில் உள்ள 150க்கும் அதிகமான அச்சகங்களின் சீசன் முறையில் நோட்டுப் புத்தகங்கள், பள்ளி பாடப் புத்தகங்கள், டைரிகள், காலண்டர்கள் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

50க்கும் அதிகமான அச்சகங்கள் பிரத்யேகமாக காலண்டர் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ஜி.எஸ்.டி வரி உயர்வு மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் 35 சதவீதத்திற்கும் மேல் காலண்டர் விலை உயர்ந்ததால் 15 சதவீதம் விற்பனை சரிந்தது. கடந்த ஆண்டும் உற்பத்தி செலவு அதிகரிப்பால் 5 சதவீதம் விலை உயர்ந்த நிலையில், மக்களவைத் தேர்தலுக்காக காலண்டர் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

இங்கு ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு அன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அடுத்த ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று 2025ம் ஆண்டுக்கான காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டது.

இதில் ரூ.15 முதல் ரூ.2,500 வரை பல்வேறு வடிவங்களில் 300 விதமான காலண்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் கியூ.ஆர் கோடு காலண்டர், தினசரி, மாதம் மற்றும் கடிகாரம் ஆகிய மூன்றையும் கொண்ட ஒரே காலண்டர், மரகத காலம் என்ற பெயரில் தத்ரூபமான வடிவமைப்பில் கடிகாரத்துடன் கூடிய பெரிய காலண்டர் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்க செயலாளர் ஜெய்சங்கர் கூறுகையில்: மின் கட்டண உயர்வு, கூலி உயர்வு, முக்கிய மூலப் பொருளான ஆர்ட் பேப்பர் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு காலண்டர் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வடிவமைப்புகளில் காலண்டர் உற்பத்தி செய்து தரப்படுகிறது, என்றார்.

தினம் ஒரு சட்டப் பேரவை தொகுதி: கடந்த ஆண்டு தினசரி நாள்காட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட கியூ.ஆர் கோர்டை ஸ்கேன் செய்து பெயர், பிறந்த தேதி, நட்சத்திரம் ஆகியவற்றை பதிவிட்டால் பதிவிட்டால், பஞ்சாங்க பலன்கள் அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டு தினம் ஒரு தொகுதி என 234 சட்டப் பேரவை தொகுதிகள் குறித்த தகவல்கள் நாள்காட்டியில் இடம் பெற்று உள்ளதுடன், கியூ.ஆர் கோர்டை ஸ்கேன் செய்தால் தொகுதியின் தொழில், சுற்றுலா, ஆன்மிகம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய 2 நிமிட வீடியோ தொகுப்பை காணும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE