எதுவுமே பேரிடர் இல்லை; ஏனென்றால் அவர்களே தேசிய பேரிடர்தான் - மத்திய அரசை சாடும் கனிமொழி

By KU BUREAU

தூத்துக்குடி: மத்திய அரசு எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. ஏனென்றால் அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கின்றனர் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது ஏழு நாட்களுக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம் என்று சொன்னார்கள். ஆனால், உண்மை அது இல்லை என்று நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தினார். இதேபோலவே இப்போது கேரளா பேரிடர் குறித்து ஏழு நாட்கள் முன்பு நாங்கள் தகவல் தெரிவித்து இருந்தோம் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார்கள். அடுத்த நாளே கேரள முதல்வர் பினராயி விஜயன் உண்மைக்கு புறமானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்வது கிடையாது. முன்கூட்டியே தகவல் தந்து விட்டோம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பேரிடர்களின்போது மத்திய அரசு, மாநில அரசுக்கு மாநிலங்களுக்கு தேவையான நிதி தந்தாக வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ, அவ்வளவு இழுத்தடிக்கிறார்கள். மத்திய அரசு எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. ஏனென்றால் அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கின்றனர்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE