சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகள் துவங்கியது... ரூ.15,000 வரை அபராதம் @சென்னை

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறாக இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

சென்னை மாநகரில் மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவல்லிக்கேணி மற்றும் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மாடுகள் முட்டி பொதுமக்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர் நிகழ்வுகளாகி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அவ்வப்போது பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்துச் சென்றாலும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தற்போது இரவு நேரங்களிலும் மாடுகளை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய மாநகராட்சி அதிகாரிகள், "மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு 4 ஆயிரத்து 237 மாடுகளை பிடித்து, ரூ.92 லட்சத்து 4 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 1500-க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.60 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருவல்லிக்கேணி மற்றும் விரிவாக்கப் பகுதிகளான பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை, நங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை பிடிக்கும் பணிகள் ஏற்கெனவே தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது. இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் அறிவுறுத்தல்படி, தற்போது மக்கள் நெருக்கமாக வசிக்கும், அதிக அளவில் மக்கள் வெளியில் வந்து செல்லும் ராயபுரம் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் இரவு நேரங்களில் சாலையில் சுற்றும் மாடுகளை பிடிக்கும் பணிகளை தொடங்கி இருக்கிறோம். இவ்வாறு 2-வது முறையாக பிடிக்கப்படும் மாடுகளுக்கான அபராதம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் மாடுகள் சாலையில் சுற்றுவது கட்டுப்படுத்தப்படும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE