கல்வியை ஜனநாயகப்படுத்தியது திராவிட இயக்கம்: அமைச்சர் பொன்முடி பெருமிதம்

By KU BUREAU

சென்னை: கல்வியை ஜனநாயகப்படுத்தியது திராவிட இயக்கம்தான் என்று சென்னையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

உலக அரசியல் சாசன தினத்தையொட்டி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை சார்பில் ‘இந்திய அரசியல் சாசனத்தின் இன்றைய நிலை: அனுபவங்களும், எதிர்பார்ப்புகளும்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய கருத்தரங்கம் அப்பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இக்கருத்தரங்கின் நிறைவு நாள்நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில்உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: இந்தியாவின் அரசியல் சாசனத்தை அம்பேத்கர் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் உருவாக்கினர். தமிழக மாணவர்கள் இந்திய அரசியல் சாசனத்தையும் அது உருவான பின்புலத்தையும் தெரிந்து கொண்டால்தான் தற்போது நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியின் பெருமைகள் அவர்களுக்கு புரியும்.

இங்கிலாந்தில் நடந்து வருவதுஒற்றையாட்சி முறை. அமெரிக்காவில் இருப்பது கூட்டாட்சி முறை. இந்தியாவில் இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் ஒருங்கிணைந்த மாநிலங்களின் ஆட்சிமுறை இருந்து வருகிறது. ஆனால், தற்போது மாநில உரிமைகளை ஒழித்துவிட்டு ஒற்றையாட்சி முறையாக மாற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள்.

இந்தியாவில் அவசர நிலைக்கு முன்பு மாநில பட்டியலில்தான் கல்விஇருந்தது. அதற்குப் பின்னரே அது பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. ஒரு காலத்தில் குறிப்பிட்ட வகுப்பினர் மட்டுமே படிக்க முடிந்தது. ஆனால், சமூக, கல்வி ரீதியில்பின்தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத் தப்பட்ட இடஒதுக்கீடு காரணமாக தற்போது அனைத்து தரப்பினரும் கல்வி பயில முடிகிறது.

சமூக சமத்துவத்தை வலியுறுத்திய இயக்கம் திராவிட இயக்கம். அனைவரையும் படிக்க வைத்து கல்வியை ஜனநாயகப்படுத்தியது திராவிட இயக்கம். தற்போது உயர்கல்வியில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் இருப்பதற்கும் இந்த இயக்கம்தான் காரணம்.

கிராமப்புற மாணவர்களும் மாணவிகளும் உயர்கல்விக்குச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டத்தையும், ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தையும் முதல்வர் கொண்டு வந்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் அரசுபள்ளிகளில் படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 உதவித்தொகை கிடைக்கும். இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம். இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் தலைமையுரை ஆற்றினார். இந்த 2 நாள் தேசியகருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் பொன்முடி வெளியிட, அதை துணைவேந்தர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.

சிறந்த கட்டுரைகளைச் சமர்ப்பித்த மாணவர்களுக்கு அமைச்சர் பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளர் கு.ரா.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE