கரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது திமுக அரசு தொடர்ந்து பொய் வழக்குகள் பதிவு செய்வதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி குற்றம் சாட்டினார்.
கரூரில் 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்தது தொடர்பான புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின்னர், சிபிசிஐடி போலீஸாரும், வாங்கல் காவல் நிலைய போலீஸாரும் அவரை தலா 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
கரூர் சிபிசிஐடி அலுவலகம், வாங்கல் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையின் பேரில், விஜயபாஸ்கருக்கு ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஜூலை 31-ம் தேதி அவர் திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், கரூர் ஆண்டாங்கோவில் என்எஸ்கே நகரில் வசித்து வரும் முன்னாள்அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று மாலை சந்தித்து, நலம் விசாரித்தார். அப்போது இருவரும் சுமார் 45 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
» ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு
» கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: உயர் அழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்தன
கடும் கண்டனம்... பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்தது முதலே, திட்டமிட்டு அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட நிலத்துக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிறையில் இருக்கும் காரணத்தால், அதை மறைப்பதற்காக வேண்டுமென்றே விஜயபாஸ்கர் மீது பொய் வழக்குபதிவு செய்து, கைது செய்துள்ளனர். இது கடும் கண்டத்துக்குரியது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.
அப்போது, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.பி. தம்பிதுரை மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.