திருச்சி: கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு காரணமாக ஆற்றில் இருந்த 2 உயர் அழுத்த மின் கோபுரங்கள் சரிந்து விழுந்தன. திருச்சி திருவானைக்காவல் அழகிரிபுரம்-நம்பர் 1 டோல்கேட் இடையே, கொள்ளிடம் ஆற்றுக்குள் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைந்துள்ளன. இந்தவழித்தடத்தில் திருவானைக்காவல் துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் முழுவதும் திறந்துவிடப்படுவதால், முக்கொம்பில் இருந்து காவிரியில் 42,000கனஅடியும், கொள்ளிடத்தில் 1.25 லட்சம் கனஅடியும் தண்ணீர் செல்கிறது.கொள்ளிடம் ஆற்றில் 3 நாட்களாக வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், திருச்சி கொள்ளிடம் புதிய பாலம் அருகே அண்மையில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.
மேலும், தடுப்புச் சுவர் அருகேஉள்ள உயர் அழுத்த மின்கோபுரமும் சரியத் தொடங்கியது. இதையடுத்து, அந்த வழித்தடத்தில் மின் விநியோகத்தை தடை செய்து, மாற்று ஏற்பாடு மூலம் திருவானைக்காவல் பகுதிக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், சரிந்த நிலையில் இருந்த கோபுரத்துக்குச் செல்லும் மின் கம்பிகளையும் துண்டித்தனர்.
மேலும், மின் கோபுரம் கீழே விழாமல் இருக்க, கம்பிகளைக் கொண்டு இழுத்துக் கட்டினர். ஆனால், நேற்று அதிகாலை இரு மின்கோபுரங்கள் முழுவதுமாக ஆற்றுக்குள் சரிந்து விழுந்தன.
» கடற்படை வளாக பள்ளியில் மோதல்: 9-ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு
» அரசுடன் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: தேசிய கல்வி தொழில்நுட்ப மன்ற தலைவர்
அங்கு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் ‘‘மற்றமின் கோபுரங்கள் சரியாமல் இருக்க, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீர்வரத்து நின்ற பின்னர், சரிந்து விழுந்த மின் கோபுரங்கள் சரி செய்யப்படும்’’ என்றார்.
பொதுப்பணித் துறை விளக்கம்: இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொள்ளிடம் புதிய பாலத்தில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க, அருகில் ரூ.6.55 கோடியில், 800 மீட்டர் நீளத்துக்கு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. வெள்ளப் பெருக்கு காரணமாக தடுப்புச் சுவர் 30 மீட்டர் அளவுக்கு நகர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், தடுப்புச் சுவரின் தற்போதைய நிலை குறித்து முழுமையாக அறிய இயலவில்லை. நீர்வரத்து குறைந்த பிறகே பாதிப்பு விவரங்கள் தெரியவரும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.