மின் ரயில் சேவை குறைப்பால் கூடுதல் பேருந்துகளை இயக்க ஏற்பாடு

By KU BUREAU

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று (ஆக.3) முதல் 14-ம் தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் 11.59 வரையும் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் ரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரையும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன்கருதி இன்று முதல் 14-ம் தேதி வரை தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகள், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகள், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் 70 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

தற்காலிக நிறுத்தம்: மேலும், காவல்துறையின் வேண்டுகோளின்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் தவிர்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆக.14-ம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE