தஞ்சாவூர்: கொள்ளிடத்தில் கரைப்புரண்டு ஓடும் தண்ணீர் கடலில் கலந்து வீணாகும் நிலையில், கல்லணை கால்வாயில் முழு கொள்ளவுக்கு தண்ணீரைத் திறக்காமல் குறைந்தளவே திறப்பதை கண்டித்து ஒரத்தநாடு அருகே விவசாயிகள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக கடந்த 28-ம் தேதியும், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து கடந்த 31-ம் தேதியும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்படி, கல்லணையில் இருந்து காவிரியில் 8,108 கனஅடியும், வெண்ணாற்றில் 2,014 கன அடியும், கல்லணை கால்வாயில் 1,500 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 25,524 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கல்லணை கால்வாயில் முழு கொள்ளவான 3,500 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க வேண்டும். ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இரண்டு நாட்களாகியும் கல்லணை கால்வாயில் குறைந்த அளவிலான தண்ணீரே திறக்கப்பட்டு வருகிறது. இதைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே வெட்டிக்காடு பகுதியில் விவசாயிகள் இன்று திருவோணம் - வெட்டிக்காடு சாலையில் டிராக்டரை சாலையில் நிறுத்தி திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அதிகளவு தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்டு கரைபுரண்டு ஓடுவதால் கடலில் சென்று வீணாக கலக்கிறது. ஆனால் பாசனத்துக்கு முழுவதும் பயன்படுத்தவும், ஏரி, குளங்களை நிரப்பும் வகையிலும் உள்ள கல்லணைக் கால்வாயில் குறைவான அளவு தண்ணீர் திறப்பதைக் கண்டித்தும், நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
» பாளையங்கோட்டை கல்லூரியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
» சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் - வெளியானது அறிவிப்பு
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருவோணம் வட்டாட்சியர் முருகவேல் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள், போலீஸார் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடைமடை வரை தண்ணீர் முழுமையாக செல்ல கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து. உத்தராபதி நம்மிடம் பேசுகையில், “கல்லணை கால்வாய் 149 கி.மீ. தூரம் கொண்டது. இதன் மூலம் 2.50 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், 649 ஏரி, குளங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் கல்லணை கால்வாயில் குறைந்த அளவு தண்ணீர் விடுவதால் யாருக்கும் பயன் இல்லை. கொள்ளிடத்தில் வீணாகும் தண்ணீரை கல்லணை கால்வாயில் திறந்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.