புழல் சிறையில் ரத்த வாந்தி எடுத்த விசாரணை கைதி: மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

By இரா.நாகராஜன்

திருவள்ளூர்: புழல் சிறையில் ரத்த வாந்தி எடுத்த விசாரணை கைதி ஒருவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (46). இவர், மோசடி வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார். இந்நிலையில், கமலக்கண்ணன் நேற்று இரவு திடீரென ரத்த வாந்தி எடுத்து மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனை அறிந்த சக கைதிகள், சிறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சிறை அதிகாரிகள், கமலக் கண்ணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த கமலக்கண்ணன், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், புழல் சிறையில் நேற்று இரவு காவலர்கள் மேற்கொண்ட சோதனையின் போது, செம்பியம் காவல் நிலைய போலீஸாரால் கஞ்சா வழக்கில் கடந்த மாதம் கைதான அயனாவரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் ( 26) என்பவர் ஒரு மொபைல் போனை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது அந்த மொபைல் போனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்விரு சம்பவங்கள் குறித்து, சிறைத் துறையினர் அளித்த புகார்களின் பேரில் புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE