ராமர் விவகாரம்; அமைச்சர் சிவசங்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும் - வானதி சீனிவாசன் ஆதங்கம்

By KU BUREAU

சென்னை: சோழர்களின் வரலாற்றை புகழ்ந்து பேசும் திமுக அமைச்சர் சிவசங்கருக்கு, சோழர்கள் இராமபிரானை தங்களின் முன்னோராக வணங்கி வழிபட்ட உண்மை தெரியாமல் போனது ஆச்சரியம். இந்துக்களின் மனதைப் புண்படுத்திய திமுக அமைச்சர் சிவசங்கர், உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதுதான் நாகரிகம் ஆகும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘நமது இந்து மதத்தினரையும், நாம் போற்றி வணங்கும் இந்துமதக் கடவுள்களையும் தொடர்ந்து அவமதிப்பதுதான் திமுகவின் முதன்மைக் கொள்கை. இராமபிரானையும் இந்துமதத்தையும் தொடர்ந்து அவமதிப்பதை வாடிக்கையாகக் கொண்ட திமுக தலைவர்களின் வரிசையில், இன்று திமுகவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களும் இணைந்துள்ளார்.

காரணம், சோழர்களின் வரலாற்றை புகழ்ந்து பேசும் திமுக அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கு, சோழர்கள் இராமபிரானை தங்களின் முன்னோராக வணங்கி வழிபட்ட உண்மை தெரியாமல் போனது ஆச்சரியம்தான். அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கு இராமபிரானின் வரலாறு மட்டுமல்ல சோழர்களின் உண்மையான பின்னணியும் வரலாறும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இல்லையெனில், இராமபிரானை திருமாலின் அவதாரமாக போற்றி, கங்கையும் இமயமும் நம்முடையது என்று ஒற்றைப் பாரத கனவு கண்ட சோழர்களைப் பற்றி அவர் புகழ்ந்திருக்க மாட்டாரோ என்னவோ.

இராமபிரானின் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்று கூறும் திமுக-வின் போக்குவரத்துத் துறை அமைச்சர், சில நாட்களுக்கு முன்பு “திராவிட மாடலின் முன்னோடியே இராமர் தான்“ என்று இராமபிரானின் துதிப் பாடிய திமுக-வின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்களையும், “சென்னையைக் காத்த இராமர் எங்கள் தமிழக முதல்வர்” என்று இராமபிரானை மேற்கோள் காட்டிப் புகழ்ந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டு பேசுவதுதான் சாலச் சிறந்தது.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், இந்து மதத்தினரின் நம்பிக்கை மீது திராவிடக் கொள்கை என்ற திராவகத்தை ஊற்றி, இந்துக்களின் நம்பிக்கையின் வேர்களைப் பொசுக்க முயற்சிக்கும் திமுக-வின் வெறுப்பரசியலுக்கு, தமிழக மக்கள் அடுத்து வரும் தேர்தலில் தக்க பாடத்தை புகட்டுவார்கள். காரணம், இராமபிரானின் வரலாறு நேர்மையையும் ஒழுக்கத்தையும் போற்றும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் அழியாத்தடமாக பதிந்துள்ளது என்பதுதான் யாவரும் அறிந்த உண்மை.

ஆகவே, இந்துக்களின் மனதைப் புண்படுத்தியமைக்கு திமுக அமைச்சர் சிவசங்கர், உடனடியாக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதுதான் நாகரிகம் ஆகும்’ என அவர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE