ராமர் இருந்ததற்கு ஆதாரமும், வரலாறும் கிடையாது - அமைச்சர் சிவசங்கர் பரபரப்பு கருத்து

By KU BUREAU

அரியலூர்: ராமருக்கு வரலாறே கிடையாது. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர் கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் இன்று நடந்த விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, “ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ராஜேந்திர சோழனுக்கு ஆயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. ஆனால், ராமர் இருந்ததற்கான வரலாறும் கிடையாது. ஆதாரமும் கிடையாது. ராமரைப் பற்றி பேசுபவர்கள்கூட அவரை அவதாரம் என்றுதான் கூறுகின்றனர். அவதாரம் என்றால் பிறக்க முடியாது, கடவுளாக பிறந்துவிட்டால் அவதாரமாக இருக்க முடியாது.

நமது வரலாற்றை மறைத்து, நம்மை மயக்கி வேறு ஒரு வரலாற்றை உயத்திக் காட்டுவதற்காக இந்த செயலை எல்லாம் செய்கின்றனர். ராஜேந்திர சோழன் ஆட்சி செய்ததற்கான கோயில்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆதாரமாக உள்ளன. ராஜேந்திர சோழனை கொண்டாடாவிட்டால் வரலாறு இல்லாதவர்களை நம் தலையில் கட்டிவிடுவார்கள்” என்று அவர் பேசினார். அமைச்சர் சிவசங்கரின் இந்த கருத்துகள் இப்போது சலசலப்பை உருவாக்கியுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE