கும்பகோணம்: சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பார்வை மாற்றுத் திறனாளி ஒருவருக்கு, ரூ.1.05 லட்சம் மதிப்பிலான நவீன இசைக் கருவியை தனது சொந்தச் செலவில் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் வழங்கினார்.
கும்பகோணம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சரவணன் (45). இரண்டு கண்களும் தெரியாத பார்வை மாற்றுத் திறனாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கல்விக் கற்காத இவர், கடந்த 20 ஆண்டுகளாக இசையை முறைப்படி கற்றுக்கொண்டு, இசைக் கருவியை வாடகைக்குப் பெற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் இசை அமைத்து வருகிறார்.
எனினும் ஒரு நிகழ்ச்சிக்காக வாங்கும் தொகையில் பெரும் பகுதியை இசைக் கருவியின் வாடகைக்கே தந்துவிடுவதால் பிற செலவுகளை சமாளிக்க முடியாமல் சரவணன் சிரமப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, அண்மையில், கும்பகோணம் எம்எல்ஏ-வான சாக்கோட்டை க.அன்பழகனிடம் தனது கஷ்டத்தைச் சொல்லி தனக்கு சொந்தமாக நவீன இசைக்கருவி வாங்க உதவிடும்படி வேண்டுகோள் வைத்திருந்தார்.
இதையடுத்து, எம்எல்ஏ-வான அன்பழகன் ரூ.1.05 லட்சம் மதிப்பிலான ஹாண்ட் சோனிக் ரிதம் எனும் நவீன இசைக் கருவியை, சென்னையில் இருந்து தனது சொந்தப் பணத்தில் வாங்கி வரவழைத்து அதை இன்று சரவணனிடம் வழங்கினார். அதை வாங்கிக் கொண்ட சரவணன், எம்எல்ஏ-வுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
» மகளை ஒருதலையாக காதலித்தவரை கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
» மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள்... கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை கொண்டாட்டம்!