கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்: மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை: கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை சிறப்புநீதிமன்றம் அனுமதி வழங்கிஉள்ளது.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரைபோதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பழனிசெட்டிபட்டி போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கரை போலீஸார் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பில், சவுக்கு சங்கரை 7 நாட்கள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

போலீஸ் காவலுக்குச் செல்ல சவுக்கு சங்கரும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கலாம். விசாரணை முடிந்து, மே 22-ம்தேதி (நாளை) பிற்பகல் 3 மணிக்குஅவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிஉத்தரவிட்டார். இதையடுத்து சவுக்கு சங்கரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையே, கஞ்சா வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு, மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வாதத்துக்காக ஜாமீன் மனு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

பெலிக்ஸுக்கு போலீஸ் காவல்: திருச்சி சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெலிக்ஸ்ஜெரால்டை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி திருச்சி மாவட்ட 3-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சைபர் க்ரைம் போலீஸார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா, பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி நேற்று உத்தரவிட்டார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை 22-ம் தேதிக்கு (நாளை) தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE