ஆடி அமாவாசைக்காக சதுரகிரி மலையேறிய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு

By அ.கோபாலகிருஷ்ணன்

வத்திராயிருப்பு: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு மலையேறிச் சென்ற திருப்பூர் மாநகர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 1 முதல் 5-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 6 மணி முதல் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறத் தொடங்கினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (56). இவர் திருப்பூர் மாநகர் அனுப்பர்பாளையம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

பாலசுப்பிரமணி தனது மனைவி புவனேஸ்வரி மற்றும் உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக சதுரகிரி மலையேறிச் சென்றார். சதுரகிரி மலைப்பாதையில் சாப்டூர் வனச்சரகம் பாப்பநத்தான் கோயில் பீட் சின்ன பசுக்கிடை என்ற இடத்தில் சென்றபோது, சுப்பிரமணியன் மயங்கி விழுந்தார்.

அவரை டோலி மூலம் தாணிப்பாறை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சுப்பிரமணியன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சாப்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE