நாமக்கல்: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பல்வேறு சிறப்புகளை கொண்டது. அதில் முக்கியமானது கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தார் என்பதாகும். இதை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொல்லிமலையில் ஆகஸ்ட் மாதம் வல்வில் ஓரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். வில்வித்தையில் அவர் சிறந்து விளங்கியதால் விழா சமயத்தில் வில் வித்தைப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்படுகிறது.
இந்த விழாவுக்கு வழக்கத்தைக் காட்டிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்வர். இந்தாண்டுக்கான வல்வில் ஓரி விழா இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. சேந்தமங்கலம் எம்எல்ஏ-வான கு.பொன்னுசாமி தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார்.
» மகளை ஒருதலையாக காதலித்தவரை கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
» மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாள்... கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடித் திருவாதிரை கொண்டாட்டம்!
விழாவை முன்னிட்டு மலர் கண்காட்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளை கவரும் வகையில் வண்ண ரோஜா மலர்களால் ஆன மலர் படுக்கை மற்றும் மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரோஜா மலர்களால் உருவாக்கப்பட்ட யானை வடிவம், பலவண்ண மலர்களால் ஆன ஆக்டோபஸ், நண்டு, மீன், சிப்பி மற்றும் காதல் சின்னம், காய்கறிகளை கொண்டு உருவாக்கப்பட்ட பட்டாம் பூச்சி, தானியங்களை கொண்டு செய்யப்பட மக்களுடன் முதல்வர் சின்னம் ஆகியவையும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இம்மலர் கண்காட்சியில் ரோஜா, ஜெர்பரா. கார்னேசன், ஆந்தூரியம், ஜிப்சோபில்லம், சாமந்தி, ஆர்கிட், லில்லியம், ஹெலிகோனியம், சொர்க்கப்பறவை, கிளாடியோஸ், டெய்ஸி, சம்பங்கி உட்பட 20 வகையான மலர்களில் செய்யப்பட்ட சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், மருத்துவப் பயிர்கள் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மருத்துவப் பயிர்கள் கண்காட்சியும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத் துணை இயக்குநர் (பொ.) இ.கார்த்திகா மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அருவிகளில் குளிக்க தடை: கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவி ஆகிய அருவிகள் அமைந்துள்ளன. வழக்கமாக வாழ்வில் ஓரி விழாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த அருவிகளில் குளித்து மகிழ்வர். இந்நிலையில், இம்முறை வழக்கத்திற்கு மாறாக அருவிகளில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
இது சுற்றுலாப் பயணிகளை மட்டுமன்றி விழாவை முன்னிட்டு கொல்லிமலை விளை பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகளையும் அதிர்ச்சியடைய செய்தது. அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கும், குளிப்பதற்கும் அனுமதியளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.