மதுரை: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் ஒவ்வொரு இந்திய வீரர் பெயரிலும் மதுரையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் மரக்கன்று நட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள். ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடும் வகையில், மதுரையில் பசுமை செயற்பாட்டாளர் ஜி.அசோக்குமார், மதுரை சுற்றுச்சூழல் பூங்காவில் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். கடந்த 28ம் தேதி ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றார்.
அதனை கொண்டாடும் வகையில் ஜி.அசோக்குமார், சுற்றுச்சூழல் பூங்காவில் மனு பாகர் பெயரில் பூவசர மரக்கன்று ஒன்றை நடவு செய்தார். இவர், ஒவ்வொரு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களிலும் இது போல் பூங்கா, அரசு மருத்துவமனை, அரசு பள்ளி வளாகங்கள், சாலையோரங்களில் மரக்கன்று நடுவதை சமூக பணியாகவே செய்து வருகிறார்.
அதுபோல், பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்பு பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளார். இதுவரை இந்த ஒலிம்பிக்கில் இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அதைப் பெற்றுக் கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரது பெயரிலும் இது போல் அவர் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
» விருதுநகரில் விற்பனைக்கு வந்த ரம்புடான் பழம்: கிலோ ரூ.400-க்கு விற்பனை
» குழந்தைகளுக்கு ‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி செலுத்த பொது சுகாதாரத் துறை இயக்குநர் அறிவுறுத்தல்
இது குறித்து நம்மிடம் பேசிய அசோக்குமார்,"ஒலிம்பிக்கில் இந்திய வீரர், வீராங்கனைகள் எத்தனை பதக்கங்களைப் பெற்றாலும் அத்தனைக்கும் தனித்தனியாக அவர்களது பெயரிலேயே மரக் கன்றுகளை நடவு செய்து கொண்டாடப் போகிறேன்" என்று கூறினார்.