சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க சட்ட நடவடிக்கை தேவை: இபிஎஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

கோவை கணபதி பகுதியில் உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் மேயரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான தா.மலரவனின் வீட்டுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது, அவர் மலரவனின் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்நிகழ்வில் எம்எல்ஏ-க்கள் அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் பெருகுடா பகுதியில் சிலந்திஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிலந்தி ஆற்றில் உற்பத்தியாகும் நீர் அமராவதி அணைக்கு வருகிறது. சிலந்தி ஆற்றின் குறுக்கேஅணை கட்டப்பட்டால் அமராவதிஅணை மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். குடிநீருக்காக மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, சிலந்திஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்நாடக அரசு மேகேதாட்டு அணையில் தடுப்பணை கட்ட முயற்சிக்கிறது. அதையும் சட்டரீதியாக சந்தித்து தடுத்து நிறுத்த வேண்டும். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கேதடுப்பணை கட்டுகிறது. அதையும் தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகா,ஆந்திரா, கேரளா மாநிலங்களில் உற்பத்தியாகி தமிழகத்துக்கு வரும்நீரை தடுக்காத சூழ்நிலையை உருவாக்க அரசு முயற்சிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டன. பவானிசாகர் ஆற்றிலிருந்து பவானி வரை 6 தடுப்பணைகளை கட்டுவதாக அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு தடுப்பணை மட்டுமே கட்டப்பட்டுள்ள தாகத் தெரிகிறது. மீதமுள்ள தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை திமுக அரசுகிடப்பில் போட்டு விட்டது. புதிய தடுப்பணைகளை யும் திமுக அரசு கட்டவில்லை.

தேர்தல் ஆணைய குளறுபடி: கோவை மாவட்டத்தில் அதிமுகவின் வாக்காளர்கள் பெரும்பாலா னோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்கு சதவீதம் என அறிவிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. மேலும் பல்வேறுசந்தேகங்கள் உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி இயங்காமல் போகின்றன. மக்களவைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை கேலிக்கூத்தாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE