மதுரை: ஒரே நாளில் உச்சம் தொட்ட பச்சை மிளகாய் - கிலோ ரூ.160-க்கு விற்பனை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தொடர் மழையால் மைசூர் மிளகாய் வரத்து நின்று போனதால், மதுரையில் இன்று ஒரே நாளில் பச்சை மிளகாய் கிலோ ரூ.160-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அனைத்து வகை காய்கறிகளுடைய நிச்சயமற்ற விலை நிலவரத்தால் நடுத்தர, ஏழை மக்கள் அன்றாட சமையலுக்கே காய்கறிகள் வாங்க முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உற்பத்தியாகும் காய்கறிகள், உள்ளூர் தேவைக்கு போதுமானதாக இல்லை. உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலைத் துறை நடவடிக்கை எடுக்காததால் காய்கறி பற்றாக்குறை அதிகரித்து அவற்றின் விலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதாக பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

கடந்த 6 மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த காய்கறிகள் விலை இன்னும் இறங்காமல் உள்ள நிலையில், மதுரை மாவட்டத்தில் மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் பச்சை மிளகாய், கத்திரிக்காய் விலை இன்று ஒரே நாளில் திடீரென அதிகரித்து விற்பனையானது.

வழக்கமாக மைசூருவில் இருந்து மட்டும் தினந்தோறும் 5 டன் மிளகாய் வரைக்கும் மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருந்த நிலையில், இன்று வெறும் 1 டன் மிளகாய் மட்டும் வந்தது. மற்றொரு வாகனம் மைசூருவில் இருந்து வந்தபோது பழுதடைந்து நின்றதால் அந்த வாகனத்தில் இருந்து வரக்கூடிய மிளகாய் நின்றுப்போனது. நேற்று கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனையான பச்சை மிளகாய், இன்று கிலோ ரூ.160 வரை விற்பனையானது.

அதேபோல் கத்தரிக்காயும் கடந்த சில நாட்ளாக விலை அதிகரித்து வந்தது. உள்ளூர் கத்திரிக்காய் வரத்து குறைவாலேயே விலை அதிகரித்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது. உடுமலைப்பேட்டை, தேனி, ஒட்டன்சத்திரம், திருப்பூர் போன்ற தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய தக்காளி ஓரளவு மாட்டுத்தாவணி மார்க்கெட்டிற்கு வரத்தொடங்கியுள்ளது. அதனால், கிலோ ரூ.30 முதல் ரூ.50 விற்பனையான தக்காளியின் நேற்று விலை குறைந்து ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனையானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE