சிவகங்கை பூங்கா ஆகஸ்ட் 8-ல் திறப்பு: மேயர் தகவல் @ தஞ்சாவூர்

By வீ.சுந்தர்ராஜன்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த சீரமைப்பு பணிகள் முடிவுற்று சிவகங்கை பூங்கா வருகிற 8-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் சிவகங்கை பூங்கா அமைந்துள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இந்த பூங்கா தஞ்சாவூர் உள்ளிட்ட வெளியூர் மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனளித்து வந்தது. இந்த நிலையில் புனரமைப்பு பணிக்காக இந்த பூங்கா கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து பூங்காவில் இருந்த பறவைகள், மான்கள் உள்ளிட்டவை சரணாலயத்திற்கு கொண்டு சென்று விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து பூங்காவில் நடைபெற்று வந்த புனரமைப்புப் பணிகள் அண்மையில் நிறைவு பெற்றது. இன்று வெள்ளிக்கிழமை காலை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் ஆர்.மகேஸ்வரி ஆகியோர் பூங்காவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மேயர், ''தஞ்சாவூர் மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்ந்த சிவகங்கை பூங்காவில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இப்பணிகள் நிறைவுபெற்று வருகிற 8ம் தேதி அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரால் திறக்கப்பட உள்ளது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE