குடியரசுத் தலைவர் தலைமையில் மாநில ஆளுநர்கள் மாநாடு ஆர்.என்.ரவி டெல்லி சென்றார்

By KU BUREAU

சென்னை: குடியரசுத் தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறும் மாநில ஆளுநர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் ஆகஸ்ட் 2, 3 ஆகிய 2 நாட்கள் மாநில ஆளுநர்கள் மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் அனைத்து மாநில ஆளுநர்களும் பங்கேற்பார்கள். மேலும், குடியரசு துணைத்தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி மற்றும் துணைத் தலைவர், பிரதமர் அலுவலகம், மத்திய அமைச்சரவை செயலகம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

மூன்று குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துதல், உயர் கல்வியில் சீர்திருத்தங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம், பழங்குடியினர் பகுதிகள், முன்னோடி மாவட்டங்கள், வட்டங்கள் மற்றும் எல்லைப் பகுதிகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக ஆளுநரின் பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE