அனைத்து சேவைகளை பெற புதிய இணையதள முகவரி: தமிழக மின்சார வாரியம் அறிமுகம்

By KU BUREAU

சென்னை: தமிழக மின்வாரியத்தின் அனைத்து சேவைகளும் பெற புதிய இணையதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தில் புதிதாக மின்இணைப்பு பெறுதல்,மின்கட்டணத்தை மாற்றி அமைத்தல், புதிய மீட்டர் பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பெற முன்பு கடிதம் மூலம் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. இதனால், நுகர்வோருக்கு காலதாமதம் ஏற்பட்டது. அத்துடன், காகித பயன்பாடும் அதிகரித்தது.

இதையடுத்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் சேவையை மின்வாரியம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், சேவை விரைவாக வழங்க முடிவதோடு, காகிதப் பயன்பாடும் தவிர்க்கப்பட்டது.

இதற்காக, www.tangedco.org என்ற இணையதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டது. சேவையை பெற விரும்பும் நுகர்வோர், இந்த முகவரியில் சென்று பின்னர் சேவைகள் பிரிவுக்குள் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

இந்நிலையில், மின்வாரியம் அனைத்து வகையான விண்ணப்பத் தேவைக்கும் ஒரே இணையதள முகவரியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, https://app1.tangedco.org/nsconline/ என்ற இணையதள முகவரியில் சென்றால் மின்வாரியத்தின் அனைத்து சேவைகளை பெறுவதற்கான தகவல்கள், விண்ணப்ப படிவங்கள், தேவைப்படும் ஆவணங்கள், செலுத்த வேண்டிய கட்டணங்கள், கால அவகாசங்கள், விநியோக பிரிவுகள், விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை கிடைக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE