இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதி தமிழக மீனவர் உயிரிழப்பு: தூதருக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

By KU BUREAU

ராமேசுவரம் / சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 400 விசைப் படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு கடல் பகுதியில் மீனவர் கார்த்திக் கேயனுக்குச் சொந்தமான விசைப்படகில் மலைச்சாமி(59), ராமச்சந்திரன்(64), முத்து முனியாண்டி(57), மூக்கையா(54) ஆகியோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்த இலங்கை கடற்படையினர், தங்களது ரோந்துக் கப்பல் மூலம் கார்த்திகேயனின் விசைப் படகைத் துரத்தியதுடன், அதன் மீதுகடுமையாக மோதினர். அந்தப் படகு நடுக்கடலில் மூழ்கியது. இதில் மீனவர் மலைச்சாமி கடலில் மூழ்கி உயிரிழந்தார். மற்றொரு மீனவரான ராமச்சந்திரன் மாயமானார். மீனவர்கள்முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர்இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு,காங்கேசன்துறையில் உள்ள கடற்படைமுகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாயமான ராமச்சந்திரனை தேடும் பணியில் கடற்படை ஹெலிகாப்டர் மற்றும் இந்திய கடலோரக் காவல் படை ரோந்துக் கப்பல் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலைக் கண்டித்து ராமேசுவரம் தாலுகா அலுவலகம் எதிரே மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மலைச்சாமி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை மலைச்சாமியின் குடும்பத்தினரிடம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோர் வழங்கினர்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்தியவெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதி தமிழக மீனவர் உயிரிழந்துள்ள சம்பவம் மீனவர்களை மிகுந்த சோகத்துக்கு உள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்து, இலங்கை வசமுள்ள இரு மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற அத்துமீறல்கள் மீனவர்களிடம் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. மேலும், தமிழ்நாட்டின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் வளைகுடா பகுதியில், தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்துக்கு அதிகபட்ச முன்னுரிமை அளித்து, தூதரக நடவடிக்கை மூலம் உரிய தீர்வு காண வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

வெளியுறவு துறை அமைச்சகம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக காங்கேசன் துறைக்கு விரைந்து சென்று, மீனவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரி வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு வரவழைக்கப்பட்டு, மத்திய அரசின்அதிர்ச்சியையும், வேதனையையும் வெளிப்படுத்தியதுடன், கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்தியதூதர் இந்த சம்பவம் குறித்து இலங்கை அரசிடம் பேசியுள்ளார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE