தமிழக அரசின் சார்பில் குமரி அனந்தனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது

By KU BUREAU

சென்னை: தமிழக அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுதந்திர தின விழாவில் அவருக்கு இந்த விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கும், தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரை தேர்வு செய்ய ஒரு குழு அமைக்கவும் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021-ம்ஆண்டு உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த ஆண்டில் இந்த விருதுக்கான விருதாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், ‘காந்தி ஃபோரம்’ அமைப்பின் தலைவருமான குமரி அனந்தனை பெருமைப்படுத்தும் வகையில், இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்க முடிவெடுக்கப்பட்டது.

‘தகைசால் தமிழர்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குமரி அனந்தனுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை ஆகஸ்ட் 15-ம்தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் வாழ்த்து: ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மூத்த தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE