கடலோர பாதுகாப்புக்கான ‘சாகர் கவாச்’ ஒத்திகை: தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை

By KU BUREAU

சென்னை: இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக மும்பையில் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள், காவல்துறையினர் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து, கடலோர பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் சாகர் கவாச் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்திலும் குறிப்பிட்ட இடைவெளியில் சாகர் கவாச் ஒத்திகை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு சாகர் கவாச் ஒத்திகை தமிழக கடலோரப்பகுதிகளில் நடத்தப்பட்டது. மிக நீண்ட கடலோரப் பகுதிகளை கொண்ட தமிழகத்தில் கடற்படை, கடலோர காவல்படை, கடலோர காவல் குழுமம், தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள காவல் துறையினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதில், காவல்துறையினரே பயங்கரவாதிகள் போன்று தமிழக கடற்பகுதிகளில் நுழைவார்கள். அவர்களை, பாதுகாப்பு படையினர் பல குழுக்களாக பிரிந்து தடுத்து தாக்குதல் நடைபெறுவதை முறியடிப்பார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஒத்திகை நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.

இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக பொதுத்துறை செயலர் நந்தகுமார், கடலோர காவல் குழும கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல், கடலோர காவல்படை டிஐஜி ஜெயந்தி, கடற்படை, சுங்கத்துறை, ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர். ஒத்திகையை எப்போது நடத்துவது, எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE