திருப்பூர்: கழிவறையில் வடமாநிலத் தொழிலாளர்களை தங்க வைத்த விவகாரம்- ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறுநீர் கழிவறை பகுதியில் உள்ள அறையில், வடமாநிலத் தொழிலாளர்களை தங்க வைத்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டணமில்லா கழிப்பிடம் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் ரூ.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்புரவு பணி செய்ய வந்த வடமாநில தொழிலாளர்களில் 4 பேரை கழிவறை உள்ளே இருக்கும் அறையில் தனியே தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த இளைஞர்கள் கடந்த ஒரு மாத காலமாக அங்கு தங்கி சமைத்து சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக அவர்களை வெளியேற்றினர். துர்நாற்றம் வீசும் கழிவறை உள்ளே இருக்கும் அறையில் தொழிலாளர்களை தங்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, இச்சம்பவம் குறித்து திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் கூறியதாவது: "மாநகராட்சி பகுதியில் உள்ள 3 பொதுக் கழிப்பிடங்களை சுத்தம் செய்யும் பணிக்காக ஒப்பந்தத்தை தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. கோவையை சேர்ந்த அந்த தனியார் நிறுவனம், தொழிலாளர்களை இந்த கழிவறையில் தங்க வைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அந்த தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பவன்குமார் கூறினார்.

இது குறித்து நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி தரப்பில் கூறியதாவது, "அந்த கழிவறை பள்ளி வளாகத்தில் இருந்தாலும், நூலகத்துக்கு வருபவர்களுக்கும், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்குமான இடம். அதனை மாநகராட்சி தான் கண்காணிக்கிறது. அதற்கும், பள்ளிக்கும் சம்பந்தம் இல்லை" என்று பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE