சென்னை: இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாகவும், இலங்கை வசமுள்ள மீனவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் படகு மீது இலங்கை ரோந்து கப்பல் மோதியுள்ளது. இதில் கடலில் விழுந்து தத்தளித்த ஒருவர் உயிரிழந்திருக்கும் நிலையில், இருவர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஒருவர் மாயமாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீனவர் உயிரிழப்பிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, 10 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய மீன்பிடி படகின் மீது இலங்கை கடற்படையினரின் ரோந்துப் படகு மோதிய துயர சம்பவம் குறித்து கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற நிகழ்வுகளில் இந்திய மீனவர்கள் உயிரிழப்பது இதயத்தை நொறுக்குவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் மீனவ சமூகத்திற்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இந்த விவகாரத்தை இலங்கை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லுமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை கேட்டுக் கொள்வதாகவும், அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமி உடலை இந்தியாவுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும், காயமடைந்த இரண்டு மீனவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
» தமிழக மீன்பிடி படகில் இலங்கை கடற்படை மோதிய சம்பவம்: மத்திய அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?
பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிகளில் இலங்கை கடற்படையினர் அடிக்கடி மேற்கொள்ளும் இது போன்ற அத்துமீறல்கள், மீனவ சமூகத்தினர் இடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்கள் பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிப்பதை தடுக்கும் வகையில் உள்ள இந்த சம்பவங்களுக்கு, தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.