இலங்கை கடற்படை கப்பல் மோதிய விபத்தில் மீனவர் உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்

By KU BUREAU

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் ரோந்துக்கப்பல் மோதியதில் தமிழக மீனவர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 300க்கும் மேற்பட்ட படகுகளில், மீனவர்கள் மீன்பிடி உரிமம் பெற்று, மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இன்று அதிகாலையில், கச்சத்தீவு அருகே, சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்துக் கப்பல் ஒன்று, மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அவர்களை விரட்டியுள்ளது.

அப்போது, இலங்கை ரோந்துக்கப்பல் மோதியதில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான படகு சேதமடைந்து கடலில் மூழ்கியுள்ளது. இந்த படகில் இருந்த மலைச்சாமி (59), மூக்கையா (54), முத்துமுனியாண்டி (57), ராமச்சந்திரன் (64) ஆகிய 4 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துள்ளனர். இதில் மூக்கையா மற்றும் முத்துமுனியாண்டியை இலங்கை கடற்படை மீட்டு இலங்கைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதே சமயம் மலைச்சாமி கடலில் மூழ்கி உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட சக மீனவர்கள், கரைக்கு கொண்டு வந்தனர். மற்றொருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மீனவர்களின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள், ராமேஸ்வரத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து ராமேஸ்வரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

இதனிடையே உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE