மேலக்கோட்டையூரில் போலீஸ் பப்ளிக் பள்ளிக் கட்டிடம்: காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

By பெ.ஜேம்ஸ் குமார்

வண்டலூர்: மேலக்கோட்டையூரில் செயல்படும் போலீஸ் பப்ளிக் பள்ளிக்கு (மாநில மாதிரி பள்ளி) ரூ.17 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை முதல்வர் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம், மேலக்கோட்டையூரில் போலீஸ் பப்ளிக் பள்ளி ( மாநில மாதிரி பள்ளி ) செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 1 முதல் 11ம் வகுப்பு வரை இங்கு வகுப்புகள் நடக்கின்றன. இந்த நிலையில் 6 முதல் 11ம் வகுப்பு வரைக்கும் வகுப்புகள் நடத்துவதற்கான கூடுதல் கட்டிடம் ரூ.17 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் இன்று காலை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பள்ளி ( மாநில மாதிரி பள்ளி ) தலைமை ஆசிரியர் எம்.குணசேகரன், காவலர் பொதுப் பள்ளி தலைமை ஆசிரியர் குருநாதன், கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் வெ.வெங்கடேசன், காவலர் வீட்டுவசதிக் கழக உதவி செயற் பொறியாளர் ஜி.இந்திராணி, பட்டதாரி ஆசிரியர் ஜி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தற்போது இப்பள்ளியில் ஒன்று முதல் பதினோறாம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக்கல்வி பிரிவில் 655 மாணவ - மாணவியர் கல்வி பயிற்று வருகின்றனர். 30 ஆசிரியர்கள் உள்ளனர். 8 ஏக்கர் பரப்பளவில் இந்த பள்ளி அமைந்துள்ளது. மேலும், இந்தப் பள்ளியில் நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி ஆய்வகம் மற்றும் வளாகத்தில் நீச்சல் குளம், டென்னிஸ், கூடைப் பந்து மைதானங்கள், இறகுப் பந்து உள்ளிட்ட விளையாட்டு அரங்குகள் உள்ளன. விரைவில் விடுதியும் கட்டப்படவுள்ளதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலக்கோட்டையூரில் அதிக அளவில் காவலர்கள் குடியிருந்து வருகின்றனர்.

இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அதிமுக அரசு தனியார் பள்ளிகளுக்கு இணையாக உலக அளவிலான கல்வித் தரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 2017ம் ஆண்டு காவலர்கள், பொதுமக்கள் ஒருங்கிணைப்புடன், தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி கட்டிடம் கட்ட ரூ.51 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 2018ம் ஆண்டில், 1 முதல் 4ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டது. இங்கு தற்போது 11ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE