ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்ட அய்யாக்கண்ணு வீட்டுக் காவலில் வைப்பு - திருச்சியில் பரபரப்பு

By எஸ்.கல்யாணசுந்தரம்

திருச்சி: விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவை, போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு இருமடங்கு லாபம் பெறும் வகையில் கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்கக் கூடாது, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள பி.அய்யாக்கண்ணு வீட்டுக்குச் சென்ற திருச்சி மாநகர போலீஸார் 10க்கும் மேற்பட்டோர், அவர் வெளியே செல்ல முடியாதபடி வீட்டுக் காவலில் வைக்கப்படுவதாக தெரிவித்தனர். இதனால், வீட்டிலிருந்து வெளியே செல்ல முடியாமல் அய்யாக்கண்ணு காவல்துறையால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டார்.

இதையறிந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், அய்யாக்கண்ணு வீட்டில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE