மதுரை: மத்திய பாஜக அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து, மதுரையில் இன்று இடதுசாரி கட்சிகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். போலீஸார் அனுமதி மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்திய பாஜக அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் மதுரையில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினர் ரா.விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன், சிபிஐ – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்) மாவட்டச் செயலாளர் மதிவாணன் தலைமையில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்றனர்.
பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலையிலிருந்து புறப்பட்டு ரயில் நிலையம் நோக்கி சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதில் போலீஸாருக்கும் கட்சியினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ரயில் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. மாற்று ஏற்பாடாக மாற்று வழியில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.
மேலும் மதுரை மெட்ரோ ரயில், புதிய தொழிற்சாலைகள், விமான நிலையம் விரிவாக்க திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். உணவு மானியம், உர மானியம், கல்வி, சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்ததை கண்டித்தும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
» தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய பட்ஜெட்: திருப்பூரில் சாலை மறியல் போராட்டம்
» பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் கம்யூனிஸ்ட்கள் மறியல்