பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பத்திரம் வழங்க ரூ.1000 லஞ்சம்: ஊர் நல அலுவலர்கள் கைது

By இ.மணிகண்டன்

விருதுநகர்: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பத்திரம் வழங்க, ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊர் நல அலுவலர்கள் இருவரை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.

விருதுநகர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (25). இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதனால் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உதவி பெற கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தனர். தற்போது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அரசு வழங்கும் உதவித்தொகைக்கான வைப்புத்தொகை பத்திரம் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்துள்ளது.

இந்த பத்திரத்தை பெறுவதற்காக ஜெயமுருகன், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊர் நல அலுவலர்களாக பணியாற்றி வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த லதாவேணி (56), ஒண்டிப்புள்ளி நாயக்கனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகேஸ்வரி (59) ஆகியோரை அணுகியுள்ளார். அவர்கள் இருவரும், நிதி உதவி பத்திரம் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனர். அவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாது என ஜெயமுருகன் கூறியதால், ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதற்கு சம்மதித்துவிட்டு வந்த ஜெயமுருகன், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் இதுகுறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி.ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் சால்வன்துரை, பூமிநாதன் மற்றும் போலீஸார் இன்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜெயமுருகனிடம் ஆயிரம் ரூபாயை ஊர் நல அலுவலர்கள் லதா வேணி, முருகேஸ்வரி இருவரும் லஞ்சமாக பெற்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE