தமிழகத்தில் இடி, மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

By KU BUREAU

சென்னை: தூத்துக்குடி, சேலம் மாவட்டத்தில் இடி, மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். 7 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து தமிழக பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் தமிழகத்துக்கு வழக்கமாக 12.5 செ.மீ. மழை கிடைக்கும். இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மே 19 வரை 8.44 செ.மீ. பதிவாகியுள்ளது. இது வழக்கத்தைவிட 17 சதவீதம் குறைவு.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வரும் மே 23-ம் தேதி வரை கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இடி, மின்னல் தாக்கியதில் தூத்துக்குடி, சேலம்மாவட்டங்களில் தலா ஒருவர்உயிரிழந்துள்ளனர். மழை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 14 கால்நடைகள் இறந்ததுடன், 7 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடலோர பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை தகவல் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கும்வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி,விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 2.66 கோடி பேரின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு வரும் 23-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் அல்லது சுற்றுலா வருவதை தவிர்க்கலாம் என்று மாவட்ட ஆட்சியர்கள் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE