தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய பட்ஜெட்: திருப்பூரில் சாலை மறியல் போராட்டம் 

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது, மத்திய பட்ஜெட்டில் எழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை வழங்கிய மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் இன்று நடந்தது.

அதன் ஒருபகுதியாக திருப்பூர் குமரன் சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, தலைமை அஞ்சல் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், மத்திய நிதி அமைச்சருக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காமல் இருந்தது, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் இருந்தது உள்ளிட்டவைகளுக்காக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE